சசிகலாவின் 3 அம்புகள். என்ன செய்ய போகிறார்?

அரசியல்

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு இப்போதுள்ள ஒரே விஷயம் சட்டப்பூர்வமாக அனைத்தையும் எதிர்கொண்டு வெளியே வருவதுதான். ஒரு பக்கம் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு எப்போது வேண்டுமானாலும் சசிகலா செல்லக்கூடும் என்கிறார்கள். அப்படியே சசிகலா சென்றாலும், அதில் சட்டப்படி எந்த தவறும் இல்லை என்று சொல்லப்படுகிறது. அமமுகவையும், அதிமுகவையும் இணைக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர்.

Image result for sasikala

மேலும், பிப்ரவரி 24-ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் வர உள்ளதால், அநேகமாக 24-ம்தேதி வரைதான் சசிகலா கெடு வைத்திருப்பார் என தெரிகிறது. 24-ம் தேதிக்குள் எல்லாம் தானாகவே சுமூகமாகிவிட்டால் எல்லாம் கைகூடி வந்துவிடும். ஒருவேளை இப்போதுள்ளது போலவே எதிர்ப்புகள் தொடர்ந்தால், அதிமுகவின் பொதுச்செயலாளர் தான் தான் என்று பறைசாற்றியபடி, அதிமுகவை மீட்டெடுக்க தயாராவார் என்கிறது தினகரன் வட்டாரம்.

இதற்கு நடுவில் மேலும் சில தகவல்களும் பரப்பப்பட்டு வருகின்றன. அதில் 3 விஷயங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒன்று, எடப்பாடியாருக்கு கொங்கு மண்டலத்தில் உள்ள செல்வாக்கை அப்படியே தன் பக்கம் திருப்பும் முயற்சியில் இறங்க போகிறாராம் சசிகலா. இரண்டு, தென் மாவட்டங்களில் மட்டும் தனக்கு செல்வாக்கு இருப்பதாக நிலவும் கருத்தை அவர் விரும்பவில்லையாம், தமிழகம் முழுவதும் தனக்கு ஆதரவு தேவை என்று விரும்புகிறாராம். அதற்கான செயல் திட்டங்களையும் கையில் எடுக்க போகிறாராம். மூன்றாவதாக, ஜெயிலில் இருந்த இந்த 4 வருஷத்தில் அதிமுகவில் உயிரிழந்த முக்கிய பிரமுகர்கள் இல்லத்திற்கு சென்று ஆறுதல் சொல்ல போகிறாராம்.

இந்த 3 தகவல்களும் உண்மையா என்று தெரியவில்லை. ஒருவேளை உண்மையாக இருக்கும்பட்சத்தில், கொங்கு மண்டல செல்வாக்கை வளைக்க போவதாக சொல்வது எடப்பாடியாருக்கு நேரடியாகவே செக் வைக்கும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இந்த 4 வருடத்தில் எடப்பாடியார் சம்பாதித்தது தன் கைக்குள் இறுக்கமாக வைத்திருப்பது கொங்கு மண்டல செல்வாக்கைதான். தன் சமுதாய மக்கள் எப்போதுமே தன்னை கைவிட மாட்டார்கள் என்று அதீத நம்பிக்கையும் வைத்துள்ள நிலையில், அதை சசிகலா டார்கெட் செய்வது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக, தென் மாவட்டங்களில் மட்டுமே செல்வாக்கு என்று ஊடகங்கள் பெரிதுபடுத்தி வருவதாக நினைக்கிறாராம். சமுதாய ஓட்டுக்களை மட்டுமே நம்பாமல், தமிழக மக்களின் மொத்த ஆதரவையும் சசிகலா பெற போவது, அவரது எதிர்கால அரசியலின் ஆழமான திட்டத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

இறுதியாக, அதிமுக பிரமுகர்களின் வீடுகளுக்கு சென்று, அந்த குடும்பத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஆறுதல் சொல்ல போவதாக தெரிகிறது. இப்படி செல்வதால், அனைத்து நிர்வாகிகளின் ஆதரவையும் அலேக்காக பெற்றுவிட முடியும். இதுவரை எந்த எந்த தலைவர்களும் இப்படி பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு கிளம்பி சென்றதில்லை. இந்த 30 வருஷமாக, எத்தனையோ அதிமுக பிரமுகர்கள் சசிகலாவின் தயவை பெற்றவர்கள்தான். அதேசமயம், அவர்கள் இல்லாமல் அதிமுகவும் இன்று இல்லை. அந்த உணர்வின் அடிப்படையிலேயே சசிகலா இப்படி ஒரு பிளான் வைத்திருப்பதாக தெரிகிறது.

இதில் இன்னொரு சமாச்சாரமும் உள்ளது.. அப்படி ஆறுதல் சொல்ல செல்வதாக கூறுகிறார்கள் இல்லையா. அப்படியென்றால், அந்த லிஸ்ட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீடும் உள்ளது. எடப்பாடியாரின் அம்மா இறந்துவிட்ட நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்த சசிகலா செல்லக்கூடும் என்கிறார்கள். ஆனால், தன் கணவன் நடராஜனுக்கு யாருமே வந்து அஞ்சலி செலுத்தாத நிலையில், சசிகலா எடப்பாடியார் வீட்டுக்கு செல்வாரா? அப்படி சென்றால் அது தமிழக அரசியலில் என்ன வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *