போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

தமிழகம்

தமிழகம் முழுவதும் 3 நாட்களாக நீடித்து வந்த அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்று திரும்பப் பெறப்பட்டது.

ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு உடனடி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள், பிப்ரவரி 25ஆம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதற்கு திமுக ஆதரவு தொழிற்சங்கமாக தொமுச, சிஐடியு, எச்எம்எஸ், ஏஐடியூசி உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் பங்கேற்றன.

இதனால் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டன. பொதுமக்களும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகள் – தொழிற்சங்கள் இடையே இன்று சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதன் முடிவில் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடுவது; புதிதாக பதவியேற்கும் அரசிடம் கோரிக்கை தொடர்பாக பேசுவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து வேலைநிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்புவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன. கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டிருந்த அரசு போக்குவரத்து சேவை, தற்போது படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்பத் தொடங்கி இருக்கிறது. நாளைமுதல் வழக்கம்போல் பேருந்து சேவைகள் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *