தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்! கொரோனாவால் பல கட்டுப்பாடுகளை வெளியிட்ட ஆணையம்

அரசியல் தமிழகம்

தமிழகம் உள்பட சட்டசபை தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.

தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 24ம் தேதி முடிவடையவுள்ளது. இதேபோல் புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டசபைகளின் ஆயுட்காலமும் ஏப்ரல், மே மாதங்களில் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, தேர்தல் ஏற்பாடுகளை தலைமைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

கடந்த 24 ஆம் தேதி 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அட்டவணை மற்றும் முன் தயாரிப்பு பணிகள் குறித்து சுனில் அரோரா தலைமையில் டெல்லியில் ஆலோசனை நடைபெற்றது.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஆணையர்கள் சுஷில் சந்திரா மற்றும் ராஜிவ் குமார் ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து, தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். அப்போது பேசிய சுனில் அரோரா கூறியதாவது:

தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தேர்தலை பாதுகாப்பாகவும், பொறுப்புடனும் நடத்த வேண்டும். தமிழகம் உள்பட சட்டசபை தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

கொரானாவால் முன்னெச்சரிக்கையுடன் தேர்தல் நடத்தப்படுகிறது. உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஆணையம் செய்துள்ளது. தேர்தலை சுமூகமாக நடத்துவதில் மருத்துவர்கள், செவிலியர்கள், அதிகாரிகளுக்கு பெரும் பங்கு உள்ளது.

வாக்குப்பதிவு நேரம் அதிகரிக்கப்படும். வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே பிரசாரத்துக்கு செல்ல வேண்டும். ஐந்து வாகனங்களுக்கு அதிகமாக செல்ல அனுமதியில்லை. 80 வயதை கடந்தவருக்கு தபால் வாக்கு முறை அமலாகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *