போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்: அரசு பஸ்கள் ஓடுமா? ஓடாதா?

தமிழகம் வர்த்தகம்

அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், வியாழக்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், பணிக்கு வராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கைவிடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும், தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப்., டி.டபிள்யூ.யு. ஆகிய தொழிற்சங்கங்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 25 (வியாழக்கிழமை) முதல், காலைவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குரவத்துக் கழகத்தில் 21,000 பேருந்துகள் உள்ளன. இந்த வேலை நிறுத்தத்தில் 1 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்று அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கங்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, அரசு பேருந்து போக்குவரத்தில் 80% பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் வியாழக்கிழமை நடைபெறும் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே விடுப்பு விண்ணப்பித்தவர்களும் நாளை கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து கழகத்துறை அதிகாரிகள் கூறுகையில், “பேச்சு நடந்து கொண்டிருக்கும்போதே வேலைநிறுத்தம் அறிவிப்பது சரியில்லை. இதுவரை 3 சுற்று பேச்சுவார்த்தை மட்டுமே நடந்து முடிந்துள்ளது. அரசு அவர்களுடைய எல்லா கோரிக்கைகளையும் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது” என்றனர்.

ஆனால், அரசின் நோட்டீஸ் மிரட்டலுக்கு பயப்படப்போவதில்லை; திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று, தொமுச அறிவித்துள்ளது. அதே நேரம் அதிமுக தொழிற்சங்கத்தினரை வைத்து பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கும் என்று, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். எனினும், வேலைநிறுத்தம் காரணமாக, பேருந்து சேவை ஓரளவு பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *