மக்கள் நவீன வாழ்க்கைக்கு மாறினாலும் கழிப்பறை பயன்பாடு 100% இல்லை. அதிகாரிகள் வருத்தம்

இந்தியா தமிழகம் நகரம் லைப்ஸ்டைல்

மொபைல் பயன்பாடு உள்ளிட்ட நவீன வாழ்க்கை முறைக்கு மக்கள் மாறிவிட்டார்கள். வீட்டு உபயோகப் பொருட்கள், உணவுப் பொருட்கள் எல்லாம் மாறிவிட்டன. ஆனால் அடிப்படை சுகாதாரத்திற்கான நல்ல பழக்க வழக்கங்களுக்கு மக்கள் இன்னமும் முழுமையாக மாறவில்லை. எல்லா வீடுகளிலும் கழிப்பறை இருந்தாலும் 100% பயன்பாடு இல்லை. பசுமை வீடு, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் கட்டித் தரப்படும் வீடு என அரசு வழங்கும் வீடுகளில் கழிப்பறை வசதி உள்ளது. பொது இடங்களில் மலம், சிறுநீர் கழிக்காத ஊராட்சி என்று அறிவித்த பிறகு அந்த நிலைமையைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். காலி மனைகள்தான் ஆரோக்கியத்திற்கு எதிரியாக இருக்கின்றன. இந்தக் கொரோனா பெருந்தொற்றுக் காலகட்டத்தில் தன் சுத்தம் முக்கியத்துவம் பெற்று உள்ளது. அதே போன்று நாம் சுற்றுப்புறத் தூய்மைக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் திரு எஸ்.செல்வகுமார் தெரிவித்தார்.

Image result for toilet vector

புதுச்சேரியில் உள்ள மக்கள் தொடர்பு கள அலுவலகம் திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள தண்டலம் கிராமத்தில் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்டம் ஆகிய துறைகளின் உதவியுடன் நடத்திய சிறப்பு விழிப்புணர்வு முகாமில் உரையாற்றிய போது திரு எஸ்.செல்வகுமார் இவ்வாறு தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குனர் ஜெ.காமராஜ் தலைமை வகித்தார். ஜனநாயகத்தின் அடிப்படை வலுப்பெற 100% வாக்குப்பதிவு அவசியம். வாக்குப் பதிவு எண்ணிக்கை குறைந்தால் அது ஒட்டுமொத்த கிராமத்துக்கே அவமானம் என்ற உணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும். புதிய வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ள இளைஞர்கள் எங்கிருந்தாலும் தங்கள் தொகுதிக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்று காமராஜ் கேட்டுக் கொண்டார்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மாவட்ட அலுவலர் க.சற்குணா தனது உரையில் திருப்போரூர் ஒன்றியத்தில் 151 அங்கன்வாடி மையங்கள் உள்ளதாகவும் அதன் மூலம் ஐந்து வயதிற்கு உட்பட்ட சுமார் 30,000 குழந்தைகள் பயன் பெறுவதாகவும் தெரிவித்தார். ஊட்டச்சத்து குறைவில்லாத குழந்தைகள் கொண்ட சமுதாயத்தை உருவாக்குவதுதான் தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தின் நோக்கம் என்று சற்குணா தெரிவித்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சி.சுப்ரமணியன் தனது உரையில் கோவிட்-19 தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவை நம்பகமானவை மற்றும் பாதுகாப்பானவை என்றும் தெரிவித்தார். தடுப்பூசி மூலம்தான் நம் நாட்டில் அம்மை நோய் ஒழிக்கப்பட்டது. அதேபோன்று கோவிட்-19 தடுப்பூசி மூலம்தான் நாம் கொரோனா வைரஸை ஒழிக்க முடியும் என்று தெரிவித்தார்.

முன்னதாக வரவேற்புரை & நோக்கவுரை ஆற்றிய மக்கள் தொடர்பு கள அலுவலக துணை இயக்குனர் டாக்டர் தி.சிவக்குமார் கொரோனா வைரஸ் பதுங்கி இருக்கிறது. எந்த நேரத்திலும் அதன் தொற்று மீண்டும் பெருந்தொற்றாக மாறலாம். தற்போது மகாராஷ்டிராவில் மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. எனவே பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் வேலூர் ஸ்ரீபுற்று மகரிஷி சமூக மருத்துவ சேவை மையத்தின் டாக்டர் ட.பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ம.வெங்கட்ராகவன் மற்றும் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் எலிசபெத் ஆகியோரும் உரையாற்றினர். ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஸ்ரீபுற்று மகரிஷி சேவை மையத்தின் சார்பில் மருத்துவ மூலிகைகள் அடங்கிய கணகாட்சியும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் ஊட்டச்சத்து கண்காட்சியும் அமைக்கப்பட்டு இருந்தன. இசை நாடகப் பிரிவில் பதிவு பெற்ற குடந்தை சந்தர் குழுவினரின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. பங்கேற்பாளர்களுக்கு இலவச மூலிகை முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. நிறைவில் களவிளம்பர உதவியாளர் மு.தியாகராஜன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *