இந்தியா அழைத்து வரப்படும் நிரவ் மோடி: மத்திய அரசின் சட்டப்போராட்டத்திற்கு வெற்றி

உலகம்

வங்கிக் கடன் மோசடி வழக்கில் லண்டனில் கைதான வைர வியாபாரி நிரவ் மோடியை, நாடு கடத்தி இந்தியா கொண்டு செல்வதற்கு தடையில்லை என்று இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவரை இந்தியா அழைத்து வர மத்திய அரசு மேற்கொண்ட சட்ட போராட்டத்தின் வெற்றியாகவே இது கருதப்படுகிறது.

வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13,578 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிந்த சிபிஐ, அவரது சொத்துகளை முடக்கியது. அதுபோலவே, மெகுல் சோக்சி மீதும் புகார் எழுந்தது.

கடைசியாக, லாவேசில் நடைபெற்ற உலக வர்த்தக மாநாட்டிற்காக இந்தியாவில் இருந்து சென்ற நிரவ் மோடி, நாடு திரும்பிவில்லை. லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடியை, கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்து போலீசார் கைது செய்தனர். அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், பல சட்ட சிக்கல்கள் எழுந்தன.

இதுதொடர்பான வழக்கு இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இங்கிலாந்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. அதில், “நிரவ் மோடி நாடு கடத்தப்பட்டால் அவருக்கு பாதுகாப்பு இல்லை என்ற வாதத்திற்கு என்ற ஆதாரமும் இல்லை. இந்தியாவில் நீதி விசாரணை சுதந்திரமானது என்று இந்திய அரசு உறுதியளித்துள்ளது. நீதிமன்றம், இதை ஏற்கிறது. சிறையில் அடைக்கப்பட்டால் மனநலம் பாதிக்கப்படும் என்ற நிரவ் மோடியின் வாதத்தில் எந்த நியாயமும் இல்லை. எனவே அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த எந்த தடையும் இல்லை” என்றார்.

நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்திய தன் விளைவாக, தற்போது அரசின் முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பு, இங்கிலாந்தின் உள்துறை செயலாளருக்கு அனுப்பப்படும். பின்னர், இந்தியா-இங்கிலாந்து ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் கீழ் ஒப்படைக்கும் உத்தரவை, இங்கிலாந்து அமைச்சரவை செயலர் பிறப்பிப்பார். அதன் பிறகே, அவர் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *