ஈ.வெ. ராமாசமிக்கும் தமிழக அரசு தேர்வுக்கும் என்ன சம்பந்தம்?

ஜனவரி 3, 2021 அன்று குரூப் – 1 முதல் நிலை (Preliminary) எழுத்து தேர்வு நடந்தது. தேர்வு எழுதிய ஒருவரை சந்தித்து உரையாடிக் கொண்டு இருந்தேன். நன்றாக தேர்வு எழுதி உள்ளீர்களா? என்று விசாரித்த போது அவர் சொன்ன பதில் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஈ.வெ.ரா வரலாறு படித்து இருந்தால் நன்றாக எழுதி இருக்க முடியும். அதை படிக்க தவறி விட்டேன். படித்து இருந்தால், நிறைய கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்க முடியும் எனக் கூறினார். பெரியாருக்கும் தமிழக அரசு தேர்வுக்கும் என்ன சம்பந்தம்? என வினாத் தாளை வாங்கிப் பார்த்த போது, அதிர்ச்சி அடைந்தேன்!

அரசு வேலைக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்? அரசு வேலைக்கான தேர்வு என்றால், பொது அறிவியல், இலக்கியம், தற்போதைய நிகழ்வுகள் சம்பந்தமான கேள்விகள் இருக்கும். ஆனால், தற்போது நடந்த தேர்வில், மொத்தம் உள்ள 200 கேள்விகளில், 10 க்கும் மேற்பட்ட கேள்விகள் பெரியார், அண்ணா துரை, நீதிக் கட்சி பற்றி இருந்தது.‌ தலைசிறந்த படைப்பு என “பரியேறும் பெருமாள்” படத்தை பற்றி கேள்வி கேட்டு இருந்தனர். அதை விட தலை சிறந்த படம் நிறைய இருக்கும் போது, அது தலை சிறந்த படமா? என்பது ஒரு கேள்விக் குறி!

 

தமிழக அரசு நடத்தும் தேர்வுகளில் முதன்மையானதாக கருதப் படுவது குரூப்-1 தேர்வு. “தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன்” (TNPSC) நடத்தும் இந்த தேர்வில் பல்வேறு துறைகளில், தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டு, தேர்வு எழுதுவார்கள். முதல் நிலை தேர்வில் வெற்றி பெறுபவர்கள், இரண்டாம் நிலை தேர்வில் வெற்றி பெற்று, அதன் பின்னர் நேர்முகத் தேர்விலும், வெற்றி பெற்றால், சில வருடங்களிலேயே ஐ.ஏ.எஸ். (IAS),  ஐ.பி.எஸ். (IPS) அதிகாரிகளாக பதவி உயர்வு பெறும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். தமிழகத்தில்  பலரும், அது போல் பதவி உயர்வு பெற்று அதிகாரிகளாக உள்ளனர்.

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்று, உயர் பதவிகளை அடைய, மாணவ – மாணவியர்கள் பல்வேறு வகையான புத்தகங்களை தேடி கண்டு பிடித்து படிப்பார்கள். இதற்கென பிரத்யோகமாக பயிற்சி வகுப்புகள் தமிழகம் எங்கும் நடத்தப் பட்டு வருகின்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக நிறைய புத்தகங்களை படித்து, தங்கள் அறிவை பெருக்கும் மாணவ – மாணவியர்கள், இனி வரும் காலங்களில், பெரியார் பற்றியும் படிக்க வேண்டும் என்ற நிலைக்கு, கட்டாயப் படுத்தி தள்ளப் படுகிறார்கள், என்பதே நிதர்சனம்.

 

குரூப் – 1 தேர்வில் கேட்கப் படும் கேள்விகளின் பாடங்களும் அதன் மதிப் பெண்களும் (Blue Print):

பொது அறிவியல் (General Science) 17
நடப்பு நிகழ்வுகள் (Current Affairs& GK) 25
புவியியல் (Geography) 13
வரலாறு & கலாச்சாரம் (History & Culture) 14
அரசியல் (Politics) 24
பொருளாதாரம் (Economics) 12
இந்திய தேசிய இயக்கம் (Indian National Movement) 10
பாரம்பரியம் (Heritage of India) 48
தமிழ்நாட்டில் வளர்ச்சி மற்றும் நிர்வாகம் (Development and Administration in Tamilnadu) 12
மனப்பான்மை மற்றும் மன திறன் (Aptitude and Mental Ability) 25

 

தற்போது குரூப் 1 தேர்வு, ஜனவரி மூன்றாம் தேதி அன்று,  தமிழகம் முழுவதிலும் உள்ள 856 மையங்களில் நடந்தது. துணை கலெக்டர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், வணிக வரித் துறை உதவி கமிஷனர்கள், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு சிலைகளுக்கான மாவட்ட அதிகாரிகள் என மொத்தம் 66 பதவிகளுக்கு முதல் நிலை தேர்வு நடந்தது. அதில், தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 57 ஆயிரத்து 237 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு எழுத வந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 264 பேர் மட்டுமே. அதில் 11 பேர் திருநங்கைகள். தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில், தேர்வு எழுத வந்தவர்களின் சதவீதம் வெறும் 51 மட்டுமே.

 

வினாத்தாளில் கேட்கப்பட்ட சில கேள்விகள்:

கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சு வெங்கடேசன் அவர்கள் எழுதிய “வேல்பாரி” என்ற புத்தகத்தில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது. ஒரு பக்கம் பெரியார், அண்ணா என திராவிட சித்தாந்தத்தைப் பற்றிய கேள்விகள், மறு பக்கம் கம்யூனிச சித்தாந்த வாதிகளின் கேள்விகள்.

பெரியார் புத்தகத்தை நன்கு படித்த வரும், கம்யூனிஸ்ட்டு பற்றி அறிந்தவர்கள் தான், இந்த கேள்விகளை தயார் செய்து இருக்க முடியும். இப்படிப் பட்ட கேள்விகளை, கம்யூனிஸ்ட்டு, திராவிட சித்தாந்தத்தை சாராதவர்கள், நிச்சயமாக தயாரித்து இருக்க வாய்ப்பு இல்லை.

கம்யூனிஸ்ட்டு சித்தாந்தம், திராவிட சித்தாந்தம் போன்ற கேள்விகளுக்கு பதில் தெரியாதவர்கள், அவர்களின் சித்தாந்த புத்தகங்களை படிக்காதவர்கள், இனி வரும் காலங்களில், தமிழக அரசுத் தேர்வில், தேர்ச்சி பெற முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்ற ஐயம் எழுகின்றது?

திருவள்ளுவருடைய உடைக்கு பாட புத்தகத்தில், காவி சாயம் பூசப் பட்டது என சில அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கூச்சலிட்டனர். திருவள்ளுவர் இந்து என்பது ஊரறிந்த உண்மை. அவர் எழுதிய திருக்குறளில், பல இடங்களில் இந்து மதக் கடவுள்களை  குறிப்பிட்டு இருக்கின்றார். அவருக்கு காவி சாயம் பூசுவது தவறு என கூறிய, எந்த ஒரு  அரசியல் தலைவராவது,  மாணவர்கள் நலன்களில் அக்கறை கொண்டு, தற்போதைய சம்பவத்திற்காக, நிச்சயம் குரல் கொடுத்து இருந்து இருக்க வேண்டும். ஆனால், யாரும் குரல் கொடுக்கவில்லை என்பது மிகவும் வருத்தமான சம்பவம்.

திராவிட சித்தாந்தம் மற்றும் கம்யூனிச சித்தாந்தம் பற்றி அறிந்து, தெரிந்து கொள்ள இது போன்ற கேள்வித் தாள்கள் மாணவ – மாணவியர்களை உற்சாகப் படுத்துகின்றது. இந்து மதத்தை மட்டுமே கடுமையாக விமர்சனம் செய்த பெரியாரை படிப்பதன் மூலம், இறை மறுப்பு கொள்கையை இளைய தலை முறையினர் அறிந்து கொள்வதன் மூலம், அவர் சார்ந்த வரலாற்றை அது போன்ற சித்தாந்தங்களை, தேடி படித்து மனதில் பதிய வைத்து, பின்னர் தேர்வில் வெற்றி பெற்று, அவர்கள் அரசு துறைகளில் பணி புரிந்தால், அவர்களது சிந்தனையும் அது சார்ந்தே இருக்கும் என்ற சிந்தனை மக்களின் மனதில் எழுகின்றது. பல சமூக ஆர்வலர்களும் அது போன்ற கருத்துக்களையே தெரிவித்து வருகின்றனர்.

மேலும், அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டிய கேள்வி தாள்கள், ஒரு சித்தாந்தத்திற்கு மட்டுமே பொதுவானதாக இருக்கிறதே? அதன் அவசியம் என்ன? என்ற கேள்வியும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுப்பப் பட்டு வருகின்றது. இது போல், மற்ற சித்தாந்தவாதிகள், தங்களுடைய சித்தாந்தம் சம்பந்தமான கேள்விகளை கேட்டு இருந்தால், தமிழக  அரசியல் கட்சித் தலைவர்கள் சும்மா இருந்திருப்பார்களா? எத்தனை கண்டனங்கள்.. எத்தனை போராட்டங்கள்.. எத்தனை ஆர்ப்பாட்டங்கள்.. என இந்நேரம் பொங்கி எழுந்து இருப்பார்கள்!

மாணவர்கள் நலனில், உண்மையிலேயே, தமிழக  அரசியல் கட்சித் தலைவர்கள் அக்கறை கொண்டவர்கள் என்றால், இதனை கண்டித்து, நிச்சயம் குரல் கொடுத்து இருக்க வேண்டும். செய்வார்களா? என்பது பலரின் எண்ணமாக இருக்கின்றது.

இனி வரும் காலங்களிலாவது, மாணவர்கள் நலனில் முழுமையான அக்கறை கொண்டு, அனைவருக்கும் பொதுவான கேள்வித் தாள்கள், தயாரிக்கப் பட வேண்டும் என்பதே, தேர்வு எழுத இருக்கும் மாணவ – மாணவியர்களின் எண்ணமாக இருந்து வருகின்றது.

செய்வார்களா..?

அது நடக்குமா..?

பொறுத்து இருந்து பார்ப்போம்..!!

காலம் பதில் சொல்லும்..!!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *