சுழற்சியில் இருக்கும் பூமி சுற்றுவதை நிறுத்தினால் என்ன ஆகும்…?

பூமி சூரியனை சுற்றுவதன் மூலம் பகல் – இரவு நமக்கு வருகிறது ஒரு வேலை பூமி சுற்றாமல் போனால் என்ன ஆகும் என்று சிந்தித்து பார்த்திருக்கிர்களா ?

நாம் வாழும் பூமி ஒரு மணி நேரத்துக்கு சுமார் 1674 கி.மீ என்னும் வேகத்தில் சுழல்கிறது. அதாவது ஒரு நொடிக்குக் கிட்டத்தட்ட 30 கி.மீ. வேகம். பூமி சுற்றுவது என்பது சுமார் 5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி உருவானதிலிருந்து அன்றாடம் நடக்கும் ஒரு விஷயம் தான். இப்படி பூமி சுற்றுவதால் என்ன பயன்? நிற்காமல் சுற்றும் பூமி, ஒருவேளை சுற்றுவதை நிறுத்தி விட்டால் என்ன நடக்கும்?

அதற்கு முதலில் நாம் பூமி சுற்றுவதால் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

பூமி சுற்றுவதால் என்ன நடக்கிறது?

பூமி சுற்றுவதால் தான் பகல் இரவு தோன்றுகின்றன. இதனால் தான் இயற்பியல் மற்றும் உயிரியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. ஏனெனில் உலகின் அனைத்து உயிர் நிகழ்வுகளுக்கும்  சூரிய ஒளி தான் ஆதாரம். வளிமண்டலத்தின் சுழற்சியும் கடல்களின் சுழற்சியும் கூட பகல் இரவுகளால் பாதிக்கப்படுகின்றன. பூமி சுழல்வதால் வளிமண்டலத்தில் வீசும் காற்று மற்றும் கடல் நீரோட்டங்களின் பாதைகளில் விலகல்கள் ஏற்படுகின்றன. புவியின் சுழற்சி மற்றும் நிலவின் ஈர்ப்பு விசையால் கடல் மட்டத்தில் அலைகள் உருவாகின்றன. இது கடற்கரை பகுதிகளில் உள்ள தாவரங்கள் மற்றும்உயிரினங்களுக்கு உயிர் ஆதாரமாக விளங்குகிறது.

பூமி சுற்றுவதை நிறுத்தினால் என்ன நடக்கும்?

பூமி சுற்றுவது எல்லாவகையிலும் நல்லது மட்டும் தான். சரி, சுற்றிக்கொண்டே இருக்கும் பூமி திடீரென சுற்றுவதை நிறுத்திவிட்டால் என்ன நடக்கும்? அதாவது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சுமார் 1674 கிமீ வேகத்தில் சுற்றும் பூமி சுழற்சியை நிறுத்தும் போது என்ன ஆகும்?

  • பூமியில் உள்ள அனைத்தும் கிழக்கு நோக்கி வேகமாக வீசி எறியப்படும். கூடவே அதிக அளவிலான கடல் சீற்றம் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. மொத்தத்தில் யாரும் உயிர் வாழ முடியாது.
  • அதே சமயம் பூமி தன்னை தானே சுற்றுவதை நிறுத்தினாலும் சூரியனைச் சுற்றிக் கொண்டு தான் இருக்கும். எனவே பூமியின் ஒரு பாதி பகுதி வருடத்தில் 6 மாதங்கள் இருட்டாகவும் அதே சமயம் மற்றொரு பகுதி அந்த ஆறு மாதங்கள் முழுவதும் பகலாகவும் இருக்கும். அப்படி இருளில் உள்ள பகுதிகள் பனிப் பிரதேசமாகவும் சூரிய ஒளி படும் பகுதிகள் தொடர் வெப்பத்தைத் தாங்க முடியாமல் பாலைவனமாகவும் மாறிவிடும்.
  • சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவதற்குப் பதிலாக மேற்கில் தோன்றி கிழக்கில் மறையும். இது தினந்தோறும் அல்ல. ஆண்டுக்கு ஒரே ஒரு முறை மட்டுமே நடக்கும். ஏனெனில் இப்போதைய 365 1/4 நாட்களும் சேர்ந்து அப்போது ஒரே ஒரு நாளாக இருக்கும்!
  • இந்த நீண்ட கால வெப்பநிலை சாய்வு, வளிமண்டல காற்று சுழற்சி முறையை மாற்றிவிடும். இதனால் காற்று நிலநடுக்கோட்டுக்கு (பூமத்திய ரேகை) இணையாக துருவங்களுக்கு நகரும்.
  • வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றத்தினால் காற்றின் வேகம் அணுகுண்டு வெடிப்பினை விடப் பல மடங்கு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.
  • அடுத்து, பூமி தன்னை தானே சுற்றுவதை நிறுத்தியதும் பூமியின் காந்தப்புலம் இல்லாமல் போய்விடும். காந்தப்புலம்  இல்லாவிட்டால், சூரிய எரிப்புகள், தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு எனப் பல ஆபத்துகள் ஏற்படலாம்.
  • சுழற்சி இல்லை என்றால் மைய விலக்கு விசையும் இல்லை. இதனால் கடல்கள் துருவங்களை நோக்கி நகரத் தொடங்கித் துருவப் பகுதிகளை முழுவதுமாக மூழ்கடிக்கும்.
  • இதற்கு நேர்மாறாக, பூமத்திய ரேகையில் ஒரு பிரம்மாண்டமான நிலப்பரப்பு வெளிப்படும், பின்னர் அவை இருபுறமும் இரண்டு பரந்த நீர்நிலைகளால் சூழப்பட்டுக் காட்சியளிக்கும்.

வேகம் குறையலாம்

பூமி உடனடியாக நிற்க கண்டிப்பாக சில பில்லியன் ஆண்டுகளுக்கு இது நடக்க வாய்ப்பே இல்லை. ஆனால் சுழற்சியின் வேகம் கண்டிப்பாக படிப்படியாகக் குறையும் என்பது மட்டும் உண்மை. விஞ்ஞானிகள் கருத்துப்படி பூமி உருவான காலகட்டத்தில் இப்போது இருப்பதை விடவும் பூமி மிக வேகமாகச் சுழன்று இருக்க வேண்டும். அப்போது ஒருநாள் என்பது வெறும் 6 மணி நேரமாகக் கூட இருந்திருக்கலாம். நம் பூமியின் துணைக்கோளான நிலவானது பூமிக்கு மிக அருகில் உருவானதால் பூமி சுற்றும் போது பூமி மற்றும் நிலவுக்கு இடையே ஏற்படும் ஈர்ப்பு விசையால் பூமியின் சுழலும் வேகம் குறைந்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.

ஆனால் முன்பும் சரி இனி வரப்போகும் காலங்களிலும் இந்த வித்தியாசம் பெரிதாக எல்லாம் இருக்காது. ஏனெனில் அடுத்த சில நூறாண்டுகளுக்குப் பிறகு பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம் 2 மில்லி நொடிகள் மட்டுமே கூடுதலாக இருக்கும் என்பது அறிவியலாளர்களின் கருத்து. இதனால் நமக்கு மட்டும் அல்ல… எதிர்கால சந்ததியினருக்கும் எந்த வித்தியாசமும் தெரியப் போவதில்லை. அதுவரைக்கும் நாம் நிம்மதியாக இருக்கலாம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *