விவசாயிகள் போர்வையில் சிலர் மட்டும் போராடுவது ஏன்?

பஞ்சாப் மக்கள் அதிகம் உண்பது கோதுமை பண்டங்களே; அரிசி என்றால் பாசுமதி மட்டும் சிறிது உண்பர். கோதுமை என்பது ரபி பருவத்தில் விளைவது, அதாவது பனியும் லேசான வெயிலும் உள்ள டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் விளைவது என்பதால், பாசுமதி நெல் சாகுபடியை ஜூலையில் தொடங்கி அக்டோபர் வரை விளைவிப்பார்கள். அறுவடை முடிந்த கையோடு, குளிர் பருவத்தில் கோதுமை சாகுபடி தொடங்க வேண்டும். ஆனால் இப்போது பாசுமதியை பெயருக்கு வைத்துவிட்டு, அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத மற்ற அரிசி ரகங்களைத்தான் அதிக அளவில் பயிரிடுகிறார்கள் அல்லது பயிரிட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதாவது அரிசியை பிரதானமாக உண்ணும் தமிழ் நாட்டில் ஆண்டுக்கு 75 லட்சம் டன்கள் அரிசி உற்பத்தி என்றால், பஞ்சாபில் அரிசி உற்பத்தி மட்டுமே 120 லட்சம் டன்கள் என்றால் நீங்களே இதில் உள்ள வியாபார நோக்கத்தை அறிந்து கொள்ளுங்கள். அவ்வளவும் வெளிமாநில விற்பனைக்கு தான். இதில் 80% நெல்லை தனியார்கள் சிண்டிகேட் அமைத்து குறைந்த விலையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, மத்திய அரசுக்கு அவர்கள் நிர்ணயித்த விலைக்கு விற்கிறார்கள். ஆனால் இதில் அந்த சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு எவ்வளவு போய்ச் சேர்கிறது என்பது தான் வினோதம்.

இந்த நெருக்கடியில் நெல் அறுவடை முடிந்ததும் இருக்கும் வைக்கோலை நம்மைப் போல கால்நடைகளுக்கு தீனியாகட்டுமே என சேமித்து வைக்க மாட்டார்கள். இப்படி அபரிமிதமாக உள்ள வைக்கோலை வயலில் எரித்து விட்டுத்தான் அடுத்த போகமான கோதுமைக்கு உழ வேண்டிய யதார்த்த களசூழல் அங்கு நிலவுகிறது. எரிக்கப்படும் வைக்கோலின் அளவு கொஞ்சம் நஞ்சமல்ல, சுமார் 28 லட்சம் ஹெக்டேரில் விளைந்த வைக்கோல் ஒவ்வொரு ஆண்டும் எரிக்கப்படுகிறது. இப்பொழுது புரிகிறதா; கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லியை சுற்றி நவம்பர், டிசம்பர் மாத பனிக்காலத்தில் பனி்மூட்டத்திற்கு பதில் புகை மூட்டம் எப்படி வந்தது என்பதற்கான உண்மையான காரணம். இதனால் ஏற்படும் மாசின் அளவு இயல்பைவிட மிக மிக அதிகம். இதன் காரணம் டெல்லிவாசிகளில் பலர் மூச்சு திணறி இறக்க நேரிடுகிறது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதிக்கும் air quality index – 120. ஆனால் டெல்லி, பஞ்சாப் நகரங்களில் 400 முதல் 1000 என்றால் ஒரு நிமிடம் யோசியுங்கள். பஞ்சாப், ஹரியானா மாநிலத்தில் கொள்முதல் செய்த நெல், அரிசியை வைக்க இடம் இல்லாமல் வேறுவழியின்றி FCI (food corporation of india – இந்தியா உணவுக் கழகம்) ஆண்டு தோறும் வீணாக்கும் அரிசியோ பல லட்சம் டன்கள். இதனால் மறைமுகமாக பல லட்சம் கோடி அரசு பணமும் வீணாவதையும் இதுவரை தடுக்க முடியவில்லை.

புதிய விவசாய சட்டங்களால் பஞ்சாப், ஹரியானா, டெல்லி நீங்கலாக இதர மாநிலங்களில் எந்த பாதிப்பும் இல்லை. இந்த சட்டங்கள் இயற்றிய பின் பீகார், உத்திரபிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம்,தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பாஜக பெற்ற தேர்தல் வெற்றி, அவை விவசாயிகளுக்கு எதிரானது இல்லை என்று நிரூபித்து விட்டது. ஆனால் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் எதிர்ப்பு என்பது விளங்காத புதிர் மட்டுமல்ல, அரசின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நடவடிக்கையும் கூட. இவர்களை இயக்குவது பஞ்சாபை ஆளும் கட்சியும், அதன் கூட்டணி காங்கிரஸ் கட்சியே எனும்போது நமக்கு கோபம் இன்னும் அதிகமாகிறது.

நெல் கொள்முதலில் MSP (Minimum support price – குறைந்தபட்ச ஆதரவு விலை) என்பது முக்கியம். ஆனால் உணவு கொள்முதல் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் MSP நிர்ணயம் ஆகி பிறகான FCI (food corporation of india – இந்தியா உணவுக் கழகம்) உணவு கொள்முதலுக்கும் இப்புதிய வேளாண் சட்டங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சொல்லப் போனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பஞ்சாபில் நெல் கொள் முதல் 20 சதவீதம் அதிகம். MSP ஆக ரூபாய்1880 வழங்கி சுமார் 100 லட்சம் டன்களுக்கும் மேல் கொள் முதல் ஆகி விட்டது. 80% கொள்முதலை நடத்தியது பஞ்சாப் அரசு தான் எனும் போது விவசாயிகள் போராட்டம் ஏன் என்ற நியாயமான கேள்வி நமக்கு எழத்தான் செய்யும். இந்த 100 கிலோ நெல்லுக்கான 1880 ரூபாயில், 1000 த்திற்கும் கீழே தான் சொந்த நிலத்தில் அல்லும் பகலும் பாராது உழைத்து பயிரிட்டு விளைவித்த விவசாயிக்கு போய் சேரும். ஆனால் இதுநாள் வரை அவர்களை மிரட்டி வந்த புரோக்கர்கள் தான் இன்று விவசாயிகள் என்ற பெயரில் உண்மையில் போராடுபவர்கள். அதாவது விவசாயிகள் போர்வையில் அராத்தியா என்று சொல்லப்படும் கமிஷன் ஏஜெண்டுகள்.

படுக்கை வசதிகளோடு ஆறு மாதத்திற்கான உணவுப் பொருள்களுடன் பல லட்சம் பெறுமான கார்களோடு எந்த விவசாயி கோதுமை பயிரிடும் இந்த நேரத்தில் டெல்லியில் வந்து கூடாரம் அமைத்து தங்கி மத்திய அரசுக்கு எதிராக போராடுவான். இந்த நேரத்தில் நம்மூர் ஆடி கார் ஐயாகண்ணு என்பவன் வருடக்கணக்காக திமுக செலவில் டெல்லியில் கோவணத்தோடு திரிந்ததை கவனித்தால் இப்போராட்டத்தின் திட்டம் தெரியும். பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகளில் 86% பேர் MSP பெறுவதில்லை. காரணம் அவர்கள் தங்களது விளைபொருட்களை அராத்தியா கும்பல்களது மூலம் தான் விற்க முடியும். அப்படியானால் MSPயில் 300, 400 ரூபாய் என கிடைக்கும் மான்யம் அராத்தியா கமிஷன் ஏஜென்ட்களுக்குத் தான் போகும். இப்போதைய புதிய சட்டங்கள் மூலம் அவை நேரடியாக விவசாயிகளுக்கு போகும். அதோடு அவர்கள் யாரிடமும் எங்கும் விற்கலாம் என்பதால் தான் புரோக்கர் முதல்வர் இதில் தனது அரசியலை கலந்து பிரச்சனையாக்கினார். இப்போதைய சட்டப்படி கமிட்டி கட்டுப்பாடு இல்லை. புதிய வேளாண்மை சட்டங்கள் இவைகளை கருத்தில் கொண்டுதான் இயற்கையிலேயே நல்ல மண்வளமும் ஆற்று நீர்வளமும் நிறைந்த பஞ்சாபில் மாற்றுப்பயிர் யோசனைக்கு ஒரு தொலை நோக்கோடு கார்ப்பரேட்டுகளையும் சேர்த்து தனிப்பட்ட buyers markets உருவாக்க முயற்சிக்கிறது இன்றைய மத்திய அரசு எனும்போது ஒரு விவசாயின் பார்வையில் இது எப்படி தவறாகும்.

விவசாயிகளுக்கு நேரடியாக பணபரிமாற்றம் , குளிர் சாதன வசதியுடன் பசுமை மாறாமல் நுகர்வோர் பெறக் கூடிய cold chain networks, லாபம் தரக் கூடிய vegetables, fruits,flowers போன்ற மாற்றுப்பயிர் உதவி திட்டம் என்று விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கும் முயற்சி தான் புதிய விவசாய சட்டங்களின் குறிக்கோள். பஞ்சாப் விவசாயிகள் சுற்றுச் சூழல் கேடு இல்லாத மாற்றுப்பயிர் திட்டம் மூலம் லாபம் பெற முயற்சி செய்து படிப்படியாக அபரிமித நெல் சாகுபடியை நிறுத்துவது தான் மத்திய அரசின் நோக்கமும் கூட. இதை அம்மாநில விவசாயிகள் உணர்ந்து அபரிமித நெல்லை யாரோ சில வியாபாரிகள் கோடிகளில் புரளவேண்டி உற்பத்தி செய்வதை நிறுத்திக் கொள்வது தான் அவர்களுக்கும் நல்லது சுற்றுப்புற சூழலுக்கும் நல்லது. காரணம் ஒரு பொருள் அபரிமிதமாக விளைந்தால் அப்பொருள் நுகர்வோர்க்கு குறைந்த விலையில் தானே கிடைக்கவேண்டும் அப்படி எந்த அரிசி வியாபாரியும் எந்த மாநிலத்திலும் குறைத்து விற்பதாக சிறிய ஆதாரம் கூட இல்லை. அப்படியெனில் யாரை வாழவைக்க பஞ்சாப் விவசாயிகள் கடுமையாக உழைத்து அரிசியை உற்பத்தி செய்கிறார்கள் என்பதையும் சிந்தித்தோமானால் இப்போராட்டத்தை நடத்துபவர்கள் யார் என்பதும் இப்போராட்டம் தேவைதானா என்பதையும் நாம் உணரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *