தமிழகத்தில் எண்ணெய், இயற்கை எரிவாயு திட்டங்கள் ஏன்?

இந்தியா

தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையில் முக்கிய திட்டங்களுக்குப் பாரத பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டி உரையாற்றினார். அதில் இந்த திட்டங்களினால் நமக்கு என்ன பயன் என்பதை விளக்கி கூறினார். அவை: 2019-20 ஆம் ஆண்டில் நமது தேவையில் 85 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் 53 சதவீத இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்தோம். பன்முகத் திறமை கொண்டுள்ள நம்மைப் போன்ற ஒரு நாடு, எரிசக்தித் தேவைக்கு இறக்குமதியை சார்ந்திருப்பது சரிதானா? இதுபோன்ற திட்டங்களில் இன்னும் முன்னதாகவே நாம் கவனம் செலுத்தி இருந்தால், நமது நடுத்தரக் குடும்பத்து மக்கள் சிரமப்பட்டிருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது. இப்போது நாம் – தூய்மையான, பசுமைவழி ஆதாரங்கள் மூலம் எரிசக்தி தயாரித்தல், வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையை குறைத்தலில் கவனம் செலுத்த வேண்டிய கூட்டுப் பொறுப்பு நமக்கு உள்ளது.

அதனால் தான், விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்குப் பயன் கிடைக்கும் வகையில் எத்தனால் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறோம். மக்களின் வாழ்க்கை நிலையை எளிதாக, ஆக்கபூர்வமானதாக ஆக்கிட பொதுப் போக்குவரத்து வசதிகளை ஊக்குவிக்கிறோம். LED பல்புகள் போன்ற மாற்று ஆதாரங்களை ஊக்குவிக்கிறோம். இதனால் நடுத்தரக் குடும்பங்களுக்கு சேமிப்பு கிடைக்கிறது. நிறைய நகரங்களில் மெட்ரோ சேவை தொடங்கப்பட்டுள்ளது. சூரியசக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவை விவசாயிகளுக்கு பெரிதும் உதவியாக உள்ளன.

2019-20 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் உலக அளவில் நாம் நான்காவது இடத்தில் இருந்தோம். சுமார் 65.2 மில்லியன் டன்கள் அளவுக்கு பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தரமான எண்ணெய் மற்றும் எரிவாயு சொத்துகளை வாங்குவதற்கு, நமது நிறுவனங்கள் வெளிநாடுகளிலும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. இன்றைக்கு இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் 27 நாடுகளில் உள்ளன. அவற்றின் மூலம் சுமார் ரூ.2.70 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

“ஒரே நாடு, ஒரே எரிவாயு தொகுப்பு” இலக்கை எட்டுவதற்காக குழாய் மூலம் எரிவாயு அளிக்கும் நெட்வொர்க்கை உருவாக்கி வருகிறோம். ஐந்தாண்டு காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ரூ.7.5 லட்சம் கோடி அளவுக்கு செலவிட திட்டமிட்டுள்ளோம். 407 மாவட்டங்களில் குழாய் இணைப்பு மூலம் எரிவாயு வசதி அளிக்கும் வகையில் நகர எரிவாயு விநியோகத் திட்டத்தை விரிவுபடுத்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோரில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் மானியத் தொகையை நேரடியாக வங்கிக் கணக்கில் பெறுகின்றனர். உஜ்வாலா யோஜ்னா மூலமாக, தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் 32 லட்சம் குடும்பங்களுக்கு புதிய இணைப்புகள் தரப்பட்டுள்ளன. பிரதமரின் கரீப் கல்யாண் யோஜ்னா மூலம் 31.6 லட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக மாற்று எரிவாயு உருளைகள் வழங்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வரையில் 143 கிலோ மீட்டர் நீளத்துக்கான இயற்கை எரிவாயு குழாய் திட்டம் இன்று தொடங்கப்படுவதால், ஓ.என்.ஜி.சி. எரிவாயு உற்பத்தி வளாகங்களில் கிடைக்கும் எரிவாயுவுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். ரூ.4,500 கோடி செலவில் நிறைவேற்றப்படும் பெரியதொரு இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இத் திட்டம் அமைந்துள்ளது. இதன் மூலம் எண்ணூர், திருவள்ளூர், பெங்களூரு, புதுவை, நாகப்பட்டினம், மதுரை, தூத்துக்குடி பகுதிகள் பயன் பெறும். நகர எரிவாயு திட்டங்களை செயல்படுத்தவும் இந்த எரிவாயுக் குழாய் திட்டம் உதவிகரமாக இருக்கும். தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ரூ.5,000 கோடி செலவில் இத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு சுத்தமான எரிவாயு கிடைப்பது, பி.என்.ஜி. வசதி, வாகனங்களுக்கு சி.என்.ஜி. போன்ற மாற்று எரிபொருள் வசதி, உள்ளூர் தொழிற்சாலைகளுக்கு தேவையான வசதிகள் இதன் மூலம் கிடைக்கும்.

Image result for ongc

ஓ.என்.ஜி.சி. எரிவாயு உற்பத்தி வளாகத்தில் இருந்து தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் வளாகத்துக்கு நேரடியாக எரிவாயு வழங்கப்படும். உரம் தயாரிப்பதற்காக, குறைந்த விலையில் ஸ்பிக் நிறுவனத்துக்கு இதன் மூலம் எரிவாயு கிடைக்கும். சேமிப்புக் கிடங்கு வசதி எதுவும் இல்லாமல், தொடர்ச்சியாக கச்சா பொருளாக இந்த எரிவாயு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. இதன் மூலம் வருடம் தோறும் உற்பத்திச் செலவில் ரூ.70 முதல் ரூ.95 கோடி வரையில் மிச்சமாகும். இதனால் உரத்தின் உற்பத்தி விலை குறையும். இந்தியாவின் எரிசக்தி தேவையில் எரிவாயு மூலம் 6.5 சதவீதம் பூர்த்தி செய்யப்படுகிறது. இதை 15 சதவீதமாக உயர்த்துவதற்கு திட்டமிடப் பட்டுள்ளது.

நாகப்பட்டினத்தில் அமையும் சி.பி.சி.எல்.-ன் புதிய சுத்திகரிப்பு வளாகத்தில் சுமார் 80 சதவீதம் அளவுக்கு உள்நாட்டு பொருட்கள் மற்றும் சேவைகள் பயன்படுத்தப்படும். போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது, பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள் மற்றும் அதைச் சார்ந்த சிறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க இது உதவும். பி.எஸ்.-6 விதிமுறைகளின்படி தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய எம்.எஸ். மற்றும் டீசலை இந்த சுத்திகரிப்பு நிலையம் உற்பத்தி செய்யும். மதிப்புகூட்டிய பொருளாக பாலிபுரப்பலீனும் உற்பத்தி செய்யப்படும்.

2030 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவின் எரிசக்தி தேவைகளில் 40 சதவீதம் அளவுக்கு, பசுமை வழி ஆதாரங்களில் இருந்து தயாரிக்கும் எரிசக்தியாக இருக்கும். மணலியில் கேசோலினில் இருந்து கந்தகத்தைப் பிரிப்பதற்கு சிபிசிஎல் அமைத்துள்ள வளாகம், பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான மற்றொரு முயற்சியாக உள்ளது. கந்தகம் குறைவாக உள்ள சுற்றுச்சூழலுக்கு உகந்த பி.எஸ்.-6 வரையறைகளுக்கு உள்பட்ட எரிபொருளை இந்த சுத்திகரிப்பு நிலையம் தயாரிக்கும்.

எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் 2014-ல் இருந்து நாம் நிறைய சீர்திருத்தங்கள் செய்திருக்கிறோம். எண்ணெய் வளம் கண்டறிதல், எண்ணெய் உற்பத்தி, இயற்கை எரிவாயு உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோக வசதியை மேம்படுத்தி இருக்கிறோம். முதலீட்டாளருக்கு இணக்கமான நடவடிக்கைகள் மூலமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். பல்வேறு மாநிலங்களில் இயற்கை எரிவாயு மீது வரிகள் விதிப்பதால் ஏற்படும் விளைவுகளைக் குறைக்க முயற்சி செய்து வருகிறோம். ஒரே மாதிரியான வரி என்ற நடைமுறையால், இயற்கை எரிவாயுவின் விலை குறைந்து, தொழில் துறையில் அதன் பயன்பாடு அதிகரிக்கும். இயற்கை எரிவாயுவை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வருவதில் உறுதியாக இருக்கிறோம். இந்தியாவுக்கு வாருங்கள், எரிசக்தி துறையில் முதலீடு செய்யுங்கள் – என்று உலகிற்கு அழைப்பு விடுக்க விரும்புகிறேன்.

கடந்த ஆறு ஆண்டுகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் ரூ.50 ஆயிரம் கோடி அளவிற்கான திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதே காலக்கட்டத்தில், 2014க்கு முன் ஒப்புதல் அளிக்கப்பட்டவற்றில், ரூ.9100 கோடி அளவிற்கான திட்டங்கள் முடிக்கப் பட்டுள்ளன. மேலும், ரூ.4,300 கோடி அளவிலான திட்டங்கள் வரவுள்ளன. நமது உறுதியான கொள்கைகள் மற்றும் இந்தியாவின் நீடித்த வளர்ச்சிக்கான முன் முயற்சிகள் என்ற கூட்டு முயற்சியால், தமிழகத்திற்கு இந்த அனைத்துத் திட்டங்களும் கிடைத்துள்ளன. தமிழகத்தில் எரிசக்தித் துறை மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுத்த, தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். நமது உயர் லட்சியங்களை நாம் தொடர்ந்து அடைவோம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *